முடியைப் பிய்த்துக்கொள்கிறேன். அர்த்தம்
புரியவில்லை – கதி கலங்குகிறது -யாராவது
அர்த்தம் சொல்லி என்னைக் காப்பாற்றுவீர்களா ?
அண்மையில் வெளிவந்துள்ள நக்கீரன் இதழில்
கேட்கப்பட்டிருக்கும் – “கலைஞருக்குப் பிறகு “
என்கிற ஒரு சாமர்த்தியமான
கிடுக்கிப்பிடி கேள்விக்கு முத்தமிழ் வித்தகர்
கலஞர் அளித்துள்ள விடை கீழே காண்க -
அந்தக் காலத்தில் “கோனார் நோட்ஸ்”
என்ற பெயரில் தமிழ்ச் செய்யுள்களுக்கு – பதவுரை,
பொருளுரை, பொழிப்புரை என்று விலாவாரியாக
விளக்கமளிக்கும் புத்தகங்கள் வருவது வழக்கம்.
தமிழ் மாணவர்களுக்கு, ஆசிரியர்களுக்கு மிக மிக
உதவியாக இருந்தவை அந்த விளக்க புத்தகங்கள்.
இப்போதெல்லாம் கலைஞர் பேசுவதன் அர்த்தத்தை
கண்டு பிடிக்கவும் அத்தகைய உதவி தேவைப்படுகிறது.
“உங்களுக்குப் பிறகு ?”
என்ற கேள்விக்கு கிடைத்திருக்கும்
கதி கலங்க வைக்கும் பதிலைப் பாருங்கள் !
————
“14 வயதில் தொடங்கி இந்த 86 வயது வரையில் -
72 ஆண்டுக்காலம் பொதுவாழ்வில் உழைத்துக்
கொண்டிருக்கிற எனக்கு, கலைத்துறை, இலக்கியத்
துறை, எழுத்துத்துறை என்று இந்தத்துறைகளை
மாத்திரம் ஒதுக்கிவிட்டு – அரசியல் துறையில்
மட்டும் ஓய்வு அளிக்க முடியாது என்று சொல்ல என்
உடன்பிறப்புகளுக்கு அவ்வளவு கல் நெஞ்சம் இருக்கும்
என்று நான் எண்ணவில்லை “
———————-
ஒரு மணி நேரமாக முடியைப் பிய்த்துக்கொள்கிறேன்.
அர்த்தம் புரியவில்லை !
யாராவது இதற்கான அர்த்தத்தை கொஞ்சம் விளக்கிச்
சொல்லி என்னைக் காப்பாற்ற முடியுமா ?
