ஏன் முடியாது நம்மால் ? – YES WE CAN !!
நான் அடிக்கடி பயணம் மேற்கொள்பவன் – பஸ்ஸிலும்,
ரயிலிலும், விமானத்திலும் .
பயணம் செய்யும்பொதெல்லாம் முடிந்த வரை வெளியில் சுற்றுப்புற
சூழ்நிலைகளைப் பார்த்துக் கொண்டே செல்வது என் வழக்கம்.
இதன் தொடர்ச்சியாக நீண்ட நாட்களாகவே என் மனதில்
தோன்றிய எண்ணங்களின் தொகுப்பே இது -
ஊர்களின் இடையே தான் எவ்வளவு இடைவெளி !
எவ்வளவு இடம் எந்த விதத்திலும் பயன்படுத்தப்படாமலே இருக்கிறது ?
இவ்வளவு இடங்கள் சும்மா இருக்கின்றனவே – இதில் எதுவுமே
செய்ய முடியாதா என்று தோன்றிக்கொண்டே இருக்கும்.
உலகத்தின் மொத்த நிலப்பரப்பில் 5 சதவீதமே உள்ள நமது நாட்டின்
ஜனத்தொகை மட்டும் உலகத்தின் மொத்த அளவில் சுமார்
20 % இருக்கிறது. எனவே நம்மிடம் இருக்கும் நிலப்பரப்பில் எதையும்
வீணாக விட்டு வைக்கக்கூடிய நிலையில் நாம் இல்லையே !
ஒரு பக்கம் விவசாய உற்பத்தித்திறன் மிகவும் குறைச்சலாக இருக்கிறது.
பருப்பு வகைகள், பழங்கள், எண்ணை வகைகள், சர்க்கரை இன்னும்
என்னவெல்லாமோ இறக்குமதி செய்து கொண்டிருக்கிறோம்.
இன்னொரு புறம் வேலை இல்லாத் திண்டாட்டம் - லட்சக்கணக்கான
மக்கள் தகுந்த வேலை கிடைக்காமல் வறுமைக்கோட்டிற்கும் கீழே
வாடுகின்றார்கள்.
இந்த நிலையில் இவ்வளவு பெரிய நிலப்பரப்புகள் வீணாகிக் கிடக்கலாமா?
இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரு திட்டம் தயாரித்தால் ?
வேலை இல்லாதோருக்கு வேலையும் அளித்து, உணவுப்பொருட்கள்
உற்பத்தி, காய்கறி, பழ வகைகள், பால், பொருட்கள் உற்பத்தி,
ஆகியவற்றையும் அதிகரிக்க ஒரே திட்டத்தில் வழி செய்தால் என்ன ?
இது சாத்தியமில்லையா ?
திட்டம் -
1) தமிழ்நாடு முழுவதையும் பத்து பத்து சதுர கிலோ மீட்டர் பரப்பு
உடைய சிறிய சிறிய வட்டங்களாக ( blocks ) பிரிக்க வேண்டும்.
(இந்த திட்டத்திற்காக மட்டும் தான் இந்த பிரிப்பு – மற்றபடி இப்போது
உள்ள எந்த கிராம, மாவட்ட எல்லைகளையும் மாற்ற வேண்டிய
அவசியம் இல்லை )
இந்த 10 சதுர கிலோமீட்டர் பரப்பிற்குள் இருக்கும் நிலங்களில்
தொடர்ந்து 5 வருடங்கள் விவசாயம் செய்யப்படாமல் கிடக்கும்
நிலஙகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரு
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படவேண்டும்.
2) பொதுவாக தற்போது விவசாயம் செய்யப்படாமல் இருக்கும்
நிலங்களை 3 வகைகளில் பிரிக்கலாம் -
அ) தகுந்த நீர் வசதி கிடைத்தால் பாசனம் செய்யக்கூடியவை
ஆ) நீர் வசதியோடு மற்ற வகையிலும் சீர் படுத்தினால் பாசனம்
செய்யத்தகுதியானவை
இ) எந்த விதத்திலும் விவசாயத்திற்கு பயன்படாதவை
இந்த 3 வகை நிலங்களிலும் பெரும்பாலும் அருகருகே கலந்து தான் இருக்கும்.
3) இந்த 10 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு உள்ளும், அருகாமையிலும்
வசிக்கக்கூடிய – வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும், மற்றும்
தகுந்த வேலை கிடைக்காமல் திண்டாடும் 50 குடும்பங்களை ஒருங்கிணைத்து
ஒவ்வொரு வட்டத்திற்கும் ஒரு கூட்டுறவு விவசாய சங்கங்கத்தை
ஏற்படுத்த வேண்டும். தேவைக்கு தகுந்தது போல் இந்த எண்ணிக்கை சிறிது
கூடவோ குறையவோ செய்யலாம். சொந்த ஊரை விட்டு தூரம் போகவேண்டாம்
என்பதால் இதில் எந்த எதிர்ப்பும் இருக்க வாய்ப்பு இல்லை.
4) மேற்படி நிலங்கள் அந்த அந்த இடத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின்
பொதுச்சொத்து ஆக்கப்பட்டு மேற்படி நபர்கள் அவற்றின் பங்குதாரர்கள்
ஆக்கப்பட வேண்டும். 10 வருடங்கள் தொடர்ந்து சங்கத்தில் உழைத்தால்
மட்டுமே அவர்கள் பங்கிற்கு உரிமையாளர்கள் ஆக முடியும். இந்த நிலங்களை
வேறு யாருக்கும் விற்க அவர்களுக்கு உரிமை இருக்காது .அவர்கள் உரிமை
என்றாவது மாற்றப்பட வேண்டும் என்றால் அது மீண்டும் கூட்டுறவு
சங்கத்திற்கு தான் என்று இருக்க வேண்டும்.
5) ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் குறைந்த பட்சம் ஒரு நபராவது
( ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் சரி ) உழைக்க முன் வர
வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 8 மணி நேர உழைப்பு தேவை.
6) ஒவ்வொரு கூட்டுறவு சங்கத்துக்கும் சொந்தமாக மிகக்குறைந்த
செலவில் சுகாதார, குடிநீர் வசதிகளுடன் 50 தொகுப்பு வீடுகள்
கட்டப்பட்டு உறுப்பினர் குடும்பங்கள்
அதில் தங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவை அந்த நிலங்களுக்கு
உள்ளாகவே இருக்கவேண்டும்.
7) முதல் ஒரு வருடத்திற்குள் அந்த வட்டத்திற்குட்பட்ட கூட்டுறவு
சங்கத்துக்கு சொந்தமான நிலங்கள் அனைத்தும் விவசாயத்திற்கு
பயன்படும் வகையில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட
இந்த குடும்பங்கள் உழைக்க வேண்டும்.
8) ஒரு வருடத்திற்குள் இந்த நிலங்கள் பண்படுத்தப்பட்டு,
முதலில் காய்கறி வகைகளோ, பழச்செடி/மரங்களோ
பயிர் செய்யப்பட வேண்டும்.
அடுத்து அடுத்து பயிர் செய்யும்போது நிலத்தின் தரம் உயர்ந்து,
மற்ற வகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். இதற்கு வேண்டிய
ஆலோசனைகளை அரசின் வேளாண்துறை அவர்களுக்கு
வழங்கலாம்.
8) இந்த ஒரு வருடத்திற்கான செலவையும்,
தேவையான ஆழ்துளை கிணறுகள் தோண்டவும், மற்றபடி நிலத்தை
பண்படுத்த தேவையான எந்திரங்கள், விதைகள், உர வகைகள்
பெறவும் தேவையான செலவினங்களை கூட்டுறவு சங்கங்களின்
மூலம் அரசு மேற்கொள்ள வேண்டும். இதை ஓரளவு மான்யமாகவும்,
மீதியை வட்டி இல்லா கடனாகவும் அளிக்கலாம்.
9) இந்த ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்கும், கூட்டுறவு சங்க
பணிகளுக்கும் அவர்களிடமிருந்தே பொருத்தமான நபர்களை
தேர்ந்தெடுத்து பொறுப்பை கொடுக்க வேண்டும். அதில் அவர்களுக்கு
தேவையான பயிற்சியை அரசு கூட்டுறவு துறை மூலமாக அளிக்கலாம்.
10) இந்த ஒருங்கிணைப்பு பணிகளில் அவர்களுக்கு உதவவும்,
ஊக்குவிக்கவும் அரசு/கட்சி சார்பில்லாத தன்னார்வ தொண்டு
நிறுவனங்களையும் / பொது நல அமைப்புகளையும் (NGOs) ஈடுபடுத்தலாம்.
11) இரண்டாம் ஆண்டிலிருந்து அந்த அந்த விவசாய குடும்பங்களுக்கு
தேவையான வருமானத்தை அந்த நிலங்களிலிருந்து விளையும் உற்பத்தி
பொருள்களின் விற்பனை மூலமே பெற வேண்டும். கூட்டுறவு சங்கத்தை
சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும் இதற்கு கூட்டுப்பொறுப்பு
ஏற்க வேண்டும்.
12) முதல் இரண்டு வகை நிலங்களை விவசாய பயன்பாட்டிற்கு
கொண்டு வரும் வேளையில், மூன்றாவது வகை நிலங்களை பயன்படுத்தி,
கோழிப்பண்ணைகள், பால் பண்ணை முதலியன
அமைக்கவும், ஆடு, மாடு வளர்க்கவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இத்தகைய கூட்டுறவு சங்கங்களின் உற்பத்திப் பொருட்களை, அரசாங்கமே
கொள்முதல் செய்யலாம்/ அவற்றின் விற்பனையில் நியாயமான விலையை
பெறவும் உதவலாம்.
13) ஒவ்வொரு கூட்டுறவு சங்கத்தையும் சேர்ந்த சுமார் 50 குடும்பங்களுக்கு
தேவையான வருமானத்திற்கு இவை வழி வகை செய்யும்.
14) ஒவ்வொரு கூட்டுறவு சங்கத்தின் மூலமும் கணிணி வழி பள்ளிகள்
அமைக்கப்பட்டு அந்த சங்க உறுப்பினர்களின் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கும்
உதவலாம். படித்துவிட்டு வேலை இல்லாமல் அரசங்கத்திடன் உதவித்தொகை
பெற்று வரும் இளைஞர்களை இதில் ஈடுபடுத்தலாம்.
சம்பந்தப்பட்ட அரசு துறைக்கும் இந்த யோசனையை அனுப்புகிறேன்.
வெறும் ஆலோசனை என்ற அளவில் உருவாகி இருக்கும் இந்த கருத்தை,
தக்க நிபுணர்களை கொண்டு நடைமுறையில் செயல்படுத்தக்கூடிய
சாத்தியக்கூறுகளை அரசாங்கம் பரிசீலிக்கலாம்.
பொறுப்பில் உள்ளவர்கள் இதனைப் பரிசீலனை செய்ய வேண்டுகிறேன்.